கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
------------------------------------------------------------------
அடர்ந்த மழையின் வெள்ளத்தில்
நமது குடைககள்
மிதக்கின்றன
நடுங்கும் உதடுகளுடன்
குளிரில் ஊதிய புன்னகை
முகத்தை முட்டுகிறது.
வெள்ளம் நமது செருப்புகளை
அள்ளிச் செல்கிறது
எனது காதலி
அடர்ந்த மழையின் தூறலில்
ஒளிந்து விடுகிறாள்.
அவளின் பட்டின் தோடுகள்
எனது பொக்கற்றில்
குளுங்கிக் கொண்டிருந்தன.
மழையின் ஒலியில்
சங்கீதம் நிரம்பிய அவளின் குரல்
நுழைகிறது
அவளின் நிறம் கலந்த
வெள்ளம்
அழகிய ஓவியமாய் படர்கிறது.
கண்களின் அசைவுகள்
மின்னலின் ஒளியை பிடித்து தின்கிறது
முழக்கத்தை மீறி
அவளின் புன்னகை ஒலிக்கிறது.
கைக்குள் குடைகள் நிறைந்திருக்க
தோழ்களில் ஊஞ்சல் முளைக்கிறது.
மழையில் நமது வீடுகளும் மரங்களும்
குளிர்த்து சிலிர்க்கின்றன
நமது வீட்டில் குளிர்
நிரம்பி
ஜன்னலின் ஊடாய் வழிகிறது.
நாம் நடக்கும் வனத்தின் தெருவில்
நமது சைக்கிள்கள்
சுருண்டு விறைத்துக் கிடக்கின்றன.
நமது காதலின் சொற்கள்
செடிகளின் மீது படிய
புல் பூடுகளின் பூக்களில்
வாசனை பெருகியது.
சிறிய தெருக்கோவிலும்
அதனுளிருந்த சிற்பமும்
மழையை
குடித்து மகிழ்ந்தது.
சிறிய குழந்தையின்
காகிதக் கப்பலில் இருந்தபடி
எனது காதலி
இலையை குடையாக பிடித்திருக்கிறாள்.
சிறுவன் மண்வெட்டியால்
கீறிவிட அழகின் வேகமாய் நகரும்
நதியில் அந்தக் கப்பல்
மிதந்து வருகிறது.
மழையில் நமதாடைகள்
உதிர்ந்து விடுகின்றன.
--------------------------------------------------------
Posted by
Deebachelvan
Friday, February 29, 2008
0 comments